மனைவியை பிரிந்த சோகத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
வேலகவுண்டம்பட்டியில் மனைவியை பிரிந்த சோகத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்,
வேலகவுண்டம்பட்டி வையப்பமலை சாலை வடக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி தமிழரசி (23). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சோமசுந்தரத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு தமிழரசி கடந்த 3 மாதத்திற்கு முன் தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டாராம்.
இதனால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சோமசுந்தரம், மாமனார் வீட்டுக்கு சென்று குடும்பம் நடத்த வருமாறும், தான் திருந்தி விட்டதாகவும் மனைவியிடம் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் தமிழரசி வர மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் சோமசுந்தரத்தின் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் அளித்த புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.