பவானி ஆற்றை நீந்தி கடக்க முயன்றபோது நீரில் மூழ்கி கட்டிட தொழிலாளி பரிதாப சாவு

பவானிசாகர் அருகே பவானி ஆற்றை நீந்தி கடக்க முயன்றபோது கட்டிட தொழிலாளி பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்தார்.

Update: 2021-07-19 21:31 GMT
பவானிசாகர்
பவானிசாகர் அருகே பவானி ஆற்றை நீந்தி கடக்க முயன்றபோது கட்டிட தொழிலாளி பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்தார்.
கட்டிட தொழிலாளி
பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் கரியா கவுண்டன்புதூரை சேர்ந்தவர் ரவி (வயது 54). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி வனஜா (49). இவர்களுக்கு  சுஜய்பிரசாந்த் (27), அனுபிரசாந்த் (26) என்ற 2 மகன்கள் உள்ளனர். 
ரவி நேற்று மதியம் 12 மணி அளவில் பவானி ஆற்றின் அக்கறையில் பகுடுதுறை கிராமத்தில் உள்ள தனது நண்பரை பார்க்க விரும்பினார். இதற்காக படகு மூலம் பவானி ஆற்றை கடந்து பகுடுதுறைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து மீண்டும் ஊருக்கு செல்வதற்காக ஆற்றின் கரைக்கு வந்து உள்ளார். அப்போது அங்கு படகோட்டி இல்லை. 
ஆற்றில் நீந்தினார்
இதனால் அவர் ஆற்றை நீந்தி கடந்து ஊருக்கு செல்லலாம் என முடிவு செய்து பவானி ஆற்றில் இறங்கினார். பின்னர் நீந்தியபடியே ஆற்றில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கி இறந்தார். நீர் சுழற்சியின் காரணமாக ரவியின் உடல் கரை ஒதுங்கியது. அப்போது ஆற்றின் கரை  பகுதிக்கு வந்த அனுபிரசாந்த் தனது தந்தை இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். 
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரவியின் உடலை கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்