தட்டச்சு- தொழிற்பயிற்சி நிலையங்கள் 50 சதவீத மாணவர்களுடன் செயல்பட்டன

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளால் தொழிற்பயிற்சி நிலையம், தட்டச்சு பயிற்சி நிலையம் ஆகியவை 50 சதவீத மாணவர்களுடன் செயல்பட்டன.;

Update: 2021-07-19 21:27 GMT
அரியலூர்:

ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலையின் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், தமிழக அரசு ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் வருகிற 31-ந்தேதி காலை 6 மணி வரை நீட்டித்து உத்தரவிட்டது. பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் ஏற்கனவே ஊரடங்கு தளர்வுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகளின் படி, பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதிக்கு பிறகு அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் (ஐ.டி.ஐ.) மற்றும் கடந்த ஏப்ரல் 22-ந் தேதிக்கு பிறகு தட்டச்சு பயிற்சி நிலையங்களும் நேற்று தான் மீண்டும் திறக்கப்பட்டு, 50 சதவீத மாணவர்களுடன், சுழற்சி முறையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட்டன. தொழிற்பயிற்சி நிலையங்களில் 2-ம் ஆண்டு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு வகுப்புகள் நடந்தன.
திரையரங்குகள் தொடர்ந்து மூடல்
கூடுதல் தளர்வுகளின்படி, பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, புத்தக வினியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாக பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிந்தார்கள். ஊரடங்கு நீட்டிப்பில் தளர்வுகள் அறிவிக்கப்படாததால் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள் தொடர்ந்து மூடப்பட்டு காட்சியளித்தன.
ஆர்வத்துடன் வந்த மாணவர்கள்
அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் பயிலும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் நேற்று வந்தனர். அவர்கள் தங்களது வகுப்புகளில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பாடங்களை கற்றனர்.

மேலும் செய்திகள்