தொழிலாளி அடித்துக் கொலை
காட்டாத்துறை அருகே முன்விரோதத்தால் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.
குலசேகரம்:
காட்டாத்துறை அருகே முன்விரோதத்தால் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.
கூலி தொழிலாளி
காட்டாத்துறை அருகே செறுகோல் அப்பட்டுவிளையை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 57), கூலி தொழிலாளி. இவருக்கு ரஞ்சிதம் (51) என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
இவர்களுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த கிருஷ்ணனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று மதியம் இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கிருஷ்ணனின் மகன் சுபாஷ் (27) மண்வெட்டியால் ரங்கசாமியை சரமாரியாக அடித்ததாக ெதரிகிறது. இதில் அவருக்கு பலத்த உள்காயம் ஏற்பட்டது.
பரிதாப சாவு
தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். சிறிது நேரம் கடந்து தகராறு முடிந்த நிலையில் ரங்கசாமி தனது வீட்டுக்கு சென்று தூங்கினார். மாலையில் நீண்ட நேரமாகியும் அவர் துக்கத்தில் இருந்து எழும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி ரஞ்சிதம், கணவரை தட்டி எழுப்ப முயன்றார். ஆனால், அவர் அசைவற்ற நிலையில் கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரங்கசாமியை மீட்டு சாமியார்மடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு ரங்கசாமியின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்ைத கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாசை தேடி வருகிறார்கள்.
முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.