தமிழகம் முழுவதும் செயல்பாட்டில் இல்லாத 8 லட்சம் அரசு செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்; ஈரோட்டில் அரசு கேபிள் டி.வி. தலைவர் பேட்டி
தமிழகம் முழுவதும் செயல்பாட்டில் இல்லாத 8 லட்சம் அரசு செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று ஈரோட்டில் அரசு கேபிள் டி.வி. தலைவர் குறிஞ்சி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு
தமிழகம் முழுவதும் செயல்பாட்டில் இல்லாத 8 லட்சம் அரசு செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று ஈரோட்டில் அரசு கேபிள் டி.வி. தலைவர் குறிஞ்சி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ஆய்வு
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவகுமார் நேற்று ஈரோடு கரூர் ரோடு மூலப்பாளையம் பகுதியில் உள்ள அரசு கேபிள் டி.வி.யின் மாவட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலகத்தில், கேபிள் டி.வி.யின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர், ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் செயல்படும் அரசு கேபிள் டி.வி. தனி தாசில்தார் அலுவலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து அரசு கேபிள் டி.வி. தலைவர் குறிஞ்சி சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 93 ஆயிரம் அரசு செட்டாப் பாக்ஸ்கள் இணைப்பில் இருந்தது. தற்போது அதில் 23 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதேபோல், தமிழகம் முழுவதும் 8 லட்சம் அரசு செட்டாப் பாக்ஸ்கள் செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்த செட்டாப் பாக்ஸ்கள் அனைத்தும் ஆபரேட்டர்களிடமும், தனியார் ஆபரேட்டர்களிடமும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. செட்டாப் பாக்ஸ்களை திரும்ப பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கடும் நடவடிக்கை
இல்லாவிட்டால் செட்டாப் பாக்ஸ்களுக்கு உண்டான அரசு கட்டணத்தை உரியவரிடம் வசூல் செய்ய நேரிடும். செட்டாப் பாக்ஸ் அரசாங்கத்திற்கு சொந்தமானது. இதனை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அதனால், செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்தாமல் வைத்துள்ளவர்கள், அதனை ஆபரேட்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டி.வி. அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
பொதுமக்கள் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்களை பெற விரும்பும் போது, தனியார் செட்டாப் பாக்ஸ்களை வாங்க காட்டாயப்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆபரேட்டர்கள் அனைவரும் அரசு கேபிள் டி.வி.க்கு ஒத்துழைப்பு தர வேண்டும். முதல் -அமைச்சர் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குக்கிராமங்களிலும் கேபிள் மற்றும் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.