மின்வேலியில் சிக்கி குட்டி காட்டுயானை செத்தது

சோமவார்பேட்டை அருகே மின்வேலியில் சிக்கி குட்டியானை செத்தது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-07-19 21:08 GMT
குடகு: சோமவார்பேட்டை அருகே மின்வேலியில் சிக்கி குட்டியானை செத்தது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

சோலார் மின்வேலி

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா அரேயூர் கிராமத்தை சேர்ந்தவர் போரய்யா. இவருக்கு சொந்தமான நிலத்தை நேகள்ளியை சேர்ந்த அவினாஷ் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். அவர் இஞ்சி சாகுபடி செய்துள்ளார். 

இந்த விளைநிலம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இதனால் அடிக்கடி வனவிலங்குகள் அந்த தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்துள்ளது. இதனால் அந்த தோட்டத்தை சுற்றி அவர் சோலார் மின்வேலி அமைத்துள்ளார். 

குட்டி யானை செத்தது

இந்த நிலையில் நேற்று காலை அவினாசின் தோட்டத்துக்கு இரை தேடி குட்டி யானை ஒன்று வந்துள்ளது. அந்த யானை சோலார் மின்வேலி கம்பியை தாண்டி விளைநிலத்திற்குள் நுழைய முயன்றது. அப்போது மின்வேலியில் சிக்கிய யானை மின்சாரம் தாக்கி துடி, துடித்து செத்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு பக்கத்து தோட்டத்தினர் தகவல் கொடுத்தனர். உடனே சோமவார்பேட்டை வனத்துறை அதிகாரி ஷாமா, கால்நடை மருத்துவர் என்.வி.பாதாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

தீவிர விசாரணை

பின்னர் மின்வேலியில் சிக்கி இறந்த யானையின் உடலை கால்நடை மருத்துவர் பாதாமி மருத்துவ பரிசோதனை செய்தார். அதன்பின்னர் அதே பகுதியில் யானையின் உடல் குழி தோண்டி புதைக்கப்பட்டது. 
செத்துப்போன யானை ஆண் என்பதும், அது 8 வயது ஆனது என்பதும் தெரியவந்தது. 

அவினாஷ் தனது தோட்டத்தில் அனுமதி பெற்ற மின்வேலி அமைத்தாரா அல்லது சட்டவிரோதமாக அமைத்தாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து சோமவார்பேட்டை வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்