ஆள் மாறாட்டம் மூலம் அபகரித்த ரூ.3½ கோடி நிலம் மீட்பு

வள்ளியூர் பகுதியில் ஆள் மாறாட்டம் மூலம் அபகரித்த ரூ.3½ கோடி நிலம் மீட்கப்பட்டது.

Update: 2021-07-19 20:08 GMT
நெல்லை:
நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் பழனிகுமார் (வயது 59). இவருடைய தந்தை ரத்தினவேல் செட்டியாருக்கு சொந்தமாக வடக்கு வள்ளியூர் பகுதியில் ரூ.3½ கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. அந்த நிலத்தினை சிலர் முறைகேடாக ரத்தினவேல் செட்டியார் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து மற்றொருவருக்கு விற்பனை செய்துள்ளனர்.
இதனை அறிந்த பழனிகுமார், அந்த நிலத்தை மீட்டு தருமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தார். போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்ணபாஸ் மேற்பார்வையில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருமலை மற்றும் போலீசார் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு, அந்த நிலத்தை மீட்டனர்.
பின்னர் அந்த நிலத்தின் உரிமையாளரான பழனிகுமாரை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து நிலத்தின் பத்திரத்தை வழங்கினார். இந்த நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து விற்பனை செய்த நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு நிலத்தை மீட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாரை சூப்பிரண்டு மணிவண்ணன் பாராட்டினார்.

மேலும் செய்திகள்