மாநகரில் போலீசாருக்கு வழங்கப்பட்ட கையடக்க கேமரா
மாநகரில் போலீசாருக்கு கையடக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் 14 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்களும், 6 குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்களும், 4 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களும் உள்ளன. இதுதவிர மாநகர குற்றப்பிரிவு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, போக்குவரத்து புலனாய்வு பிரிவு, விபசார தடுப்பு பிரிவு என பல்வேறு யூனிட்டுகளும் செயல்பட்டு வருகிறது. திருச்சி மாநகரில் ரோந்து பணிகளில் ஈடுபடும் போலீசார், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை கையாள செல்லும் போலீசார் ஒரு வித அச்ச உணர்வுடனேயே பணியாற்ற வேண்டிய நிலை இருந்தது. காரணம் அந்த இடங்களில் முதற்கட்ட ஆதாரங்களை திரட்டுவதில் சிரமங்கள் இருந்தன. இதையடுத்து காவல்துறையை நவீனப்படுத்தும் நோக்கத்தில் தற்போது போலீசாருக்கு கையடக்க கேமரா வழங்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் ஒரு போலீஸ் நிலையத்துக்கு 3 என மொத்தம் 50 கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கேமராக்களை போலீசார் தங்களது சட்டையில் மாற்றி கொண்டு ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ, மறியல் சம்பவமோ நடைபெறும் இடங்களில் பணியாற்ற வேண்டும்.
அவ்வாறு பணியாற்றும்போது, அங்கு நடைபெறும் காட்சிகள் கேமராவில் பதிவாகி விடும். மேலும், கேமராவில் பதிவு செய்த காட்சிகளை அன்றைய தினமே கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த கேமரா பதிவு காட்சிகள் வழக்குகளில் முக்கிய ஆவணமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
நேற்று முதல் இந்த கையடக்க கேமராக்களை போலீசார் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் பலர் கையடக்க கேமராக்களை தங்களது சட்டையில் மாட்டி இருந்தனர்.