56 நாட்களுக்கு பிறகு உழவர் சந்தைகள் செயல்பாட்டிற்கு வந்தன
திருவண்ணாமலை மாவட்டத்தில் 56 நாட்களுக்கு பிறகு உழவர் சந்தைகள் செயல்பாட்டிற்கு வந்தன.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 56 நாட்களுக்கு பிறகு உழவர் சந்தைகள் செயல்பாட்டிற்கு வந்தன.
உழவர் சந்தைகள் திறப்பு
கொரோனா தொற்றின் 2-வது அலை பரவல் காரணமாக கடந்த மே மாதம் 24-ந்தேதி உழவர் சந்தைகள் மூடப்பட்டன. தற்போது தொற்று குறைந்து வருவதால் கடந்த சில வாரங்களாக ஊரடங்கில் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் பின்புறம், தாமரை நகர், செங்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, கீழ்பென்னாத்தூர் ஆகிய 8 இடங்களில் உழவர் சந்தைகள் 56 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு 50 சதவீத கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் பின்புறத்தில் உள்ள உழவர் சந்தையை கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
அப்போது அவர் காய்கறிகளை விற்பனை செய்யும் விவசாயிகளிடம், காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களிடம் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முகக்கவசங்களை அணிய வலியுறுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து அவர் உழவர் சந்தையை பார்வையிட்டு அங்கு ரூ.52¼ லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சூரிய சக்தியில் இயங்கும் மின் உலர்த்தி, கூடுதல் கடைகள் கட்டுதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் அங்கு பழுதடைந்துள்ள மேற்கூரைகளை சரிசெய்ய உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி தாலுகா அலுவலகத்தில் இருந்து உழவர் சந்தைக்கு செல்லக்கூடிய பாதை சேறும், சகதியுமாக இருப்பதை கண்ட அவர் உடனடியாக மண்ணை நிரவி சமப்படுத்தி சுகாதார சீர்கேடு ஏற்படாமல் முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.