திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் குடியேறும் போராட்டம்

தொகுப்பு வீடு வழங்காததை கண்டித்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-19 18:16 GMT
திருவண்ணாமலை 

தொகுப்பு வீடு வழங்காததை கண்டித்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியேறும் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று ேகாரிக்கை மனுக்களை அளிப்பதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தந்தனர். காலை 11.30 மணியளவில் 25-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தங்களுக்கு தொகுப்பு வீடு வழங்கக் கோரி கையில் பாய், படுக்கை, அடுப்பு, பாத்திரங்கள், ஆடுகளுடன் வந்து திடீரென குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களை போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே அழைத்து வந்தனர். அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு பாய், படுக்கையை விரித்து, அடுப்பு வைத்து சமைக்க தொடங்கினர். அவர்களிடம் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனர். 

அப்போது திருங்கைகளின் தலைவி ராதிகாநாயக் கூறுகையில், திருவண்ணாமலை நகரத்தில் 150-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றோம். நாங்கள் வாடகை வீட்டில்தான் வசிக்கிறோம். நாங்கள் குடியிருக்க தொகுப்பு வீடு அமைத்துத் தர வேண்டும் என்று இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்ட முறை கோரிக்கை மனு அளித்து உள்ளோம். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

1999-ம் ஆண்டு கீழ்பென்னாத்தூர் சந்தைமேடு பகுதியில் எங்களில் 5 பேருக்கு வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டது. அப்போது எங்களிடம் பணம் வசதி இல்லாததால் வீடு கட்ட இயலவில்லை. அதனால் அந்த மனையை திரும்ப பெற்று அங்கு ஆண்கள் விடுதி கட்டப்பட்டு உள்ளது. பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். 

பரபரப்பு 

எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை இங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என்றனர். பின்னர்  திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் மற்றும் சமூக நலத்துறை அலுவலர் கந்தன் ஆகியோர்  போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 

அப்போது இது குறித்து மனு கொடுங்கள், திருங்கைகள் நல வாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு உரிய நடைமுறையில் வீட்டுமனை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்