பிளஸ்-2 பொதுத் தேர்வு மதிப்பெண் வெளியீடு: புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

Update: 2021-07-19 18:04 GMT
புதுக்கோட்டை:
ஆன்-லைன் வகுப்புகள்
கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. கடந்த கல்வி ஆண்டு முடிந்து நடப்பு கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஆன்-லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்-அப் வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த கல்வியாண்டில் 2020-21 மாணவ-மாணவிகளின் நலன் கருதி எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் உள்பட மற்ற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வு எழுதாமலேயே அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அரசால் அறிவிக்கப்பட்டது. 
இதில் பிளஸ்-2 மதிப்பெண், உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு மிகவும் அவசியம் என்பதால் அந்த பொதுத்தேர்வுக்கு மட்டும் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 
பிளஸ்-2 தேர்வு வெளியீடு
அதனடிப்படையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் இருந்து 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத்தேர்வில் இருந்து 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறை தேர்வில் 30 சதவீதமும் என மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளில் அரசு தேர்வு துறையும், கல்வித்துறையும் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அரசு அறிவித்த படி ஒவ்வொரு மாணவரின் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வு மதிப்பெண், பிளஸ்-2 வகுப்பு செய்முறை தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அனைத்தும் பெறப்பட்டு 100 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டன.
அதன்படி நேற்று தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் விவரம் இணையதள முகவாிகளில் வெளியிட்டது. சரியாக காலை 11 மணியளவில் அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிகளில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது.
19 ஆயிரத்து 423 மாணவர்கள் தேர்ச்சி 
அந்த வகையில் அந்த பணிகள் முடிவடைந்து நேற்று பிளஸ்-2 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். 
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தெரிவித்ததாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 19 ஆயிரத்து 423 பேர் தேர்வு எழுதினர். இதில் 9 ஆயிரத்து 54 மாணவர்களும், 10 ஆயிரத்து 369 மாணவிகளும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 516 பேரும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 479 பேரும், இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 428 பேரும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். 
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 174 பள்ளிகளின் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 105 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 47 மெட்ரிக் மேல்நிலை பள்ளிகள், 7 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 11 பகுதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, 3 பள்ளித்துறையின் கட்டுப்பாட்டல் செயல்படும் சுயநிதிப்பள்ளிகள் அடங்கும். கடந்த 2018-19-ம் ஆண்டு தேர்வில் 90.01 சதவீதமும், 2019-20-ம் ஆண்டு தேர்வில் 93.26 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிக மதிப்பெண்கள்
இந்த பிளஸ்-2 தேர்வு மொத்தம் 600 மதிப்பெண்கள் கொண்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 551 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் 512 பேரும், 501-ல் இருந்து 550 வரை எடுத்தவர்கள் 3 ஆயிரத்து 132 பேரும், 451-ல் இருந்து 500 வரை எடுத்தவர்கள் 5 ஆயிரத்து 819 பேரும், 401-ல் இருந்து 450 வரை எடுத்தவர்கள் 5 ஆயிரத்து 511 பேரும், 351-ல் இருந்து 400 வரை எடுத்தவர்கள் 3 ஆயிரத்து 383 பேரும், 301-ல் இருந்து 350 வரை பெற்றவர்கள் 558 பேரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்டத்தில் வேளாண்மை அறிவியல் பாடத்தில் 5 பேரும் தணிக்கையியலில் 8 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்று கூறினார்.

மேலும் செய்திகள்