முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அ தி மு க வினர் திடீர் முற்றுகை
ரூ 3 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக கூறி முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட அ.தி.மு.க.வினர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
திருக்கோவிலூர்
திட்டப்பணிகள்
திருக்கோவிலூரை அடுத்த முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியில் சுமார் 100 திட்டப்பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அதிகாரிகளால் பணி ஆணை வழங்கப்பட்டது.
இதையடுத்து ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் ஏரி மதகு பராமரிப்பு பணி, சமுதாய கிணறு, தடுப்பணை, சிமெண்டு சாலை, ஊராட்சி மன்ற கட்டிடம், சுற்று சுவர், வடிகால் வாய்க்கால், வயல்வெளி சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டன. மழை மற்றும் தேர்தல் காரணமாக சில பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. தேர்தல் முடிந்த பின்னர் அந்த பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முற்றுகை
இந்த நிலையில் முகையூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அனைத்து பணிகளையும் நிறுத்த சொல்லி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பணியை செய்தவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, இளங்கோவன், தனபால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மணம்பூண்டியில் உள்ள முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளிடம் வாக்குவாதம்
பின்னர் அ.தி.மு.க.வினர் வட்டார வளர்ச்சி அதிகாரிசாம்ராஜ்யிடம், கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளை எவ்வாறு நிறுத்தலாம் என கேட்டு வாக்குவாதம் செய்ததோடு பணிகளைதொடர்ந்து செயல்படுத்த உத்தரவிடக்கோரி கோரிக்கை மனு கொடுத்தனர். இதைக் கேட்டறிந்த அதிகாரிகள் விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்ட சம்பவத்தால் மணம்பூண்டியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.