நீலகிரியில் 7 ஆயிரத்து 106 மாணவர்கள் தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி நீலகிரியில் 7 ஆயிரத்து 106 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.;

Update: 2021-07-19 17:48 GMT
ஊட்டி.

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி நீலகிரியில் 7 ஆயிரத்து 106 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு மதிப்பெண், பிளஸ்-2 வகுப்பு செய்முறை தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு பொதுத்தேர்வு  மதிப்பெண்கணக்கிடப்பட்டது. அதன்படி முடிவுகள் வெளியானது. 

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பிளஸ்-2 மாணவ-மாணவிகள் வரவில்லை. அவர்கள் வீடுகளில் இருந்தபடியே www.tnresults.nic.in, www.dgel.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்துகொண்டனர்.

தேர்வு முடிவு

ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 மாணவர்கள் பள்ளிக்கு வராததால் தலைமை ஆசிரியர் உள்பட ஆசிரியர்கள் கணினியில் தேர்வு முடிவை அறிந்துகொண்டனர். பின்னர் பள்ளியில் பிளஸ்-2 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய நோட்டீசை தகவல் பலகையில் ஒட்டினர். 

அனைவரும் தேர்ச்சி

நீலகிரியில் குன்னூர், கூடலூர் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. குன்னூர் கல்வி மாவட்டத்தில் 56 மேல்நிலை பள்ளிகள் உள்ளது. மாணவர்கள் 1,868 பேர், மாணவிகள் 2,267 பேர் என மொத்தம் 4,135 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத இருந்தனர். 

கூடலூர் கல்வி மாவட்டத்தில் 26 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. மாணவர்கள் 1,436 பேர், மாணவிகள் 1,535 பேர் என மொத்தம் 2,971 பேர் படித்தனர். நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 82 மேல்நிலை பள்ளிகளில் மாணவர்கள் 3 ஆயிரத்து 304 பேர், மாணவிகள் 3 ஆயிரத்து 802 பேர் என மொத்தம் 7 ஆயிரத்து 106 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். ஏற்கனவே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்