விவசாயியை புலி அடித்துக்கொன்றது

முதுமலையில் விவசாயியை புலி அடித்துக்கொன்றது. உடலை எடுக்கவிடாமல் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-07-19 17:47 GMT
கூடலூர்,

முதுமலையில் விவசாயியை புலி அடித்துக்கொன்றது. உடலை எடுக்கவிடாமல் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

திடீரென பாய்ந்த புலி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட ங்கனக்கொல்லி கிராமத்தை சேர்ந்தவர் குஞ்சு கிருஷ்ணன்(வயது 52), விவசாயி. இவர் நேற்று மதியம் 1 மணியளவில் தனது வீட்டில் இருந்து மண்வயல் பஜாருக்கு நடந்து சென்றார்.

அங்குள்ள ஆற்றுவாய்க்காலை கடக்க முயன்றபோது கரையோரம் உள்ள புதரில் படுத்துக்கிடந்த புலி திடீரென குஞ்சு கிருஷ்ணன் மீது பாய்ந்தது. தொடர்ந்து அவரை அடித்து புதருக்குள் இழுத்து சென்றது. 

போராட்டம்

இதை அருகில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்த விவசாயிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே கூச்சல் போட்டுக்கொண்டு ஓடி வந்தனர். இதனால் அவரை போட்டுவிட்டு புலி தப்பி சென்றது. 

ஆனால் பலத்த காயம் அடைந்த குஞ்சு கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர். பின்னர் கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், தாசில்தார் சிவக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு சசிகுமார், கூடலூர் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன், முதுமலை வனசரகர்கள் தயானந்தன், சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். 

பின்னர் குஞ்சு கிருஷ்ணனின் உடலை அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை தடுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

வாக்குவாதம்

இதையடுத்து அவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘முதுமலை ஊராட்சி மக்களுக்கு மாற்றிடம் வழங்கும் திட்டம் விரைவாக செயல்படுத்தப்படவில்லை. வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கவில்லை. 

மேலும் வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் கேரளாவில் ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது’ என்றுக்கூறி கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பேச்சுவார்த்தை

எனினும் அதிகாரிகள் பல கட்டமாக கொட்டும் மழையிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கிராம மக்களுடன் கூடலூர் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலனும் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 1-ந் தேதி கூடலூரில் போராட்டம் நடத்தப்படும் என்றார். 

பின்னர் கோரிக்கைகள் தொடர்பாக நாளை(இன்று) கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் உறுதி அளித்தார். இதனால் போராட்டத்தை கைவிட்டு குஞ்சு கிருஷ்ணனின் உடலை எடுக்க கிராம மக்கள் அனுமதித்தனர். 

தொடர்ந்து உடலை போலீசார் கைப்பற்றி கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து மசினகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயியை புலி அடித்துக்கொன்ற சம்பவம்  அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்