மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும்

சுருக்குமடி, இரட்டைமடி வலைகள் பயன்படுத்தும் விவகாரத்தில் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என நாகையில், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2021-07-19 17:39 GMT
நாகப்பட்டினம்:
சுருக்குமடி, இரட்டைமடி வலைகள் பயன்படுத்தும் விவகாரத்தில் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என நாகையில், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு
நாகை மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் அரசின் சார்பில் நடந்து வரும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று நாகை வந்தார். 
நாகூர் பட்டினச்சேரி வெட்டாறு முகத்துவாரத்தில் ரூ.19.87 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் கடல் அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணியினை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பைபர் படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மீனவர்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
ரூ.20 லட்சம் நிவாரண உதவி
அங்கிருந்து சாமந்தான்பேட்டைக்கு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த மே மாதம் டவ்தே புயலில் சிக்கி மாயமான சாமந்தான்பேட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் உதவியை வழங்கினார்.
நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு செய்தார். அங்குள்ள கடற்கரைக்கு சென்ற அவர் தன்னிறைவு திட்டத்தின் கீழ் நடந்து வரும் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார். 
பேட்டி
தொடர்ந்து நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி இறங்கு தளத்துக்கு சென்று அங்கு கூடுதல் மீன் ஏலக்கூடம் அமைத்தல், சேதமடைந்த தரைப்பகுதிகளை சீரமைத்தல், தெரு விளக்குகள் அமைத்தல், தூர்வாரும் பணிகள் உள்ளிட்டவை குறித்து அங்குள்ள மீனவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அமைச்்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மீனவ கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள மீனவர்களை சந்தித்து அவர்களுக்கு என்னென்ன அடிப்படை தேவைகள் மற்றும் அரசால் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று (அதாவது நேற்று) நாகை மாவட்ட மீனவ கிராமங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
மீனவர்களிடம் பேச்சுவார்த்தை
மீனவர்கள் தங்களுடைய அடிப்படை கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் அனைத்தும் முதல்-அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றி தரப்படும். இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவது குறித்து முதல்-அமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகள் விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 
தடை செய்யப்பட்ட வலைகளான சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்தும் விவகாரத்தில் அந்தந்த மாவட்ட கலெக்டர், போலீஸ் துறையினர் மூலம் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், எம்.எல்.ஏக்கள் முகமது ஷா நவாஸ், நாகை மாலி, தி.மு.க. நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இதேபோல  வேதாரண்யத்தில், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறையில் கட்டப்பட்ட வரும் தூண்டில் முள் வளைவுகளை  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்