தோட்டக்கலை பண்ணையில் காட்டுயானைகள் அட்டகாசம்
தோட்டக்கலை பண்ணையில் காட்டுயானைகள் அட்டகாசம்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழம், பேரிக்காய், பச்சை ஆப்பிள், மங்குஸ்தான் போன்ற பழங்களின் சீசன் தொடங்கி உள்ளது. இந்த பழங்களை தின்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து குன்னூரை சுற்றி உள்ள வனப்பகுதிகள், விளைநிலங்களுக்கு காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று குன்னூர் அருகே காட்டேரி பூங்கா தோட்டக்கலை பண்ணையை சுற்றி அமைக்கப்பட்ட தடுப்புகள் மற்றும் மின்வேலிகளை காட்டுயானைகள் உடைத்து உள்ளே புகுந்தன. தொடர்ந்து அங்கு பயிரிடப்பட்டு இருந்த அன்னாசி பழங்கள், உருளைகிழங்கு மற்றும் முள்ளங்கி பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.
இதை அங்கு பணிபுரிந்து கொண்டு இருந்த பணியாளர்கள் கண்டு பீதி அடைந்தனர். மேலும் பாதுகாப்பான இடத்துக்கு தப்பி சென்றனர். அதன்பின்னர் அங்கிருந்து சென்ற காட்டுயானைகள் ரெயில்வே பாதையில் உலா வந்தது. காட்டேரி பூங்கா அருகே சாலையை கடந்த காட்டுயானைகள் ரன்னிமேடு ரெயில் நிலையம் அருகே உள்ள தொட்டியில் தண்ணீர் குடித்து விட்டு அங்கேயே முகாமிட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் வனச்சரகர் சசிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டுயானைகள் நடமாட்டத்தை கண்காணித்தனர்.அவை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாமல் இருக்கவும், தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது.