கத்தியால் வெட்டிய வாலிபர் கைது
திருப்பூரில் போக்சோ சட்டத்தில் தேடப்படும் தொழிலாளியை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது;
நல்லூர்
திருப்பூரில் போக்சோ சட்டத்தில் தேடப்படும் தொழிலாளியை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
கத்திவெட்டு
சிதம்பரம் அருகே முத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சாரதி வயது 19. இவர் திருப்பூர் காசிபாளையம், காஞ்சி நகர் பகுதியில் தங்கி எம்பிராய்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் 11 வயது சிறுமியிடம் தவறாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அந்த பகுதியை சேர்ந்த மதி 19 என்பவர் பார்த்து சிறுமியின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சாரதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இது குறித்து தகவலறிந்த சாரதி நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மதி, அவரது நண்பருடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது சாரதி, சிறுமியின் தந்தையிடம் சொன்னது குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாரதியின் வயிறு, கழுத்து பகுதிகளில் சரமாரியாக குத்தி, வெட்டிக்கொலை செய்ய முயன்றுள்ளார். இது குறித்து அக்கம்பக்கம் இருந்தவர்கள் நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
கைது
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நல்லூர் போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சாரதியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று மதியம் மதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சாரதிக்கு சிகிச்சை முடிந்த பின் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.