காதல் விவகாரத்தில் மகள் விஷம் குடித்தார் மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை குழாயை பிடித்தபடியே தவித்த மற்றொரு மகள்

மத்தூர் அருகே காதல் விவகாரத்தில் மகள் விஷம் குடித்ததால் மனமுடைந்த தாயும் மகனும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். மற்றொரு மகள் குழாயை பிடித்தபடியே கிணற்றில் விடிய விடிய தவித்துள்ளார்.

Update: 2021-07-19 17:00 GMT
மத்தூர்:
மத்தூர் அருகே காதல் விவகாரத்தில் மகள் விஷம் குடித்ததால், மனமுடைந்த தாயும், மகனும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். மற்றொரு மகள் குழாயை பிடித்தபடியே கிணற்றில் விடிய, விடிய தவித்துள்ளார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மூத்த மகளின் காதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மின்டிகிரி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 50). இவர் பெங்களூருவில் தங்கி டிரைவர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அம்சவேணி (45). இவர்களுக்கு பிரியா (19), திரிஷா (17) ஆகிய 2 மகள்களும், விஷ்ணு (14) என்ற மகனும் இருந்தனர். இதில் பிரியா பர்கூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். திரிஷா மத்தூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 வும், சிறுவன் விஷ்ணு மின்டிகிரி உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர். 
இந்தநிலையில் பிரியாவும், அதே கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகன் திருப்பதி (19) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் காதல் குறித்து அறிந்த மகாலிங்கம், அம்சவேணி ஆகியோர் மகளுக்கு திருமணம் செய்ய குண்டலானூர் பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவருக்கு பேசி நிச்சயம் செய்தனர். இவர்களின் திருமணம் அடுத்த மாதம் நடத்த அழைப்பிதழ் அச்சடித்து பிரியாவின் பெற்றோர் உறவினர்களுக்கு வழங்கி வந்தனர்.
காதலர்கள் விஷம் குடித்தனர்
தனது காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெறுவதை அறிந்த திருப்பதி நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதனிடையே காதலன் விஷம் குடித்து உயிருக்கு போராடுவதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த பிரியா, விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாய், மகன் தற்கொலை
திருமணம் நிச்சயிக்கப்பட்ட மகள் காதலனுக்காக விஷம் குடித்ததால் மனமுடைந்த அம்சவேணி தனது கணவருக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தவித்தார். தனது கணவர் பெங்களூருவில் இருந்து வருவதற்கு முன்னதாகவே குடும்பத்தினருடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள அவர் முடிவு செய்தார். இதையடுத்து அம்சவேணி தனது 2-வது மகள் திரிஷா மற்றும் மகன் விஷ்ணு ஆகியோரை அழைத்துக்கொண்டு தனது தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் குதித்தார். 
கிணற்றில் 15 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்த நிலையில், நீரில் விழுந்து தத்தளித்த மாணவி திரிஷா கிணற்றில் இருந்த குழாயை பிடித்து உயிர் தப்பினார். அதேசமயம் அம்சவேணியும், சிறுவன் விஷ்ணுவும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். குழாயை பிடித்தவாறு விடிய, விடிய கிணற்றில் தவித்த திரிஷா விடியற்காலையில் மேலே ஏறிவந்து கிராமத்தினருக்கு இது குறித்து தகவல் கொடுத்துள்ளார். 
உடல்கள் மீட்பு
இதையடுத்து கிராம மக்கள் கிணற்றுக்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து அவர்கள் மத்தூர் போலீஸ் நிலையத்துக்கும், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து அம்சவேணி மற்றும் அவரது மகன் விஷ்ணு ஆகியோரின் உடல்களை மீட்டனர். பின்னர் தாய், மகன் 2 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தாய், மகன் கிணற்றில் குதித்து தற்ெகாலை செய்து கொண்ட சம்பவம் குறித்து   மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் விவகாரத்தில் மகள் விஷம் குடித்ததால் மனமுடைந்த அம்சவேணி மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்