ரெயிலில் கடத்தி வந்த 1 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

ரெயிலில் கடத்தி வந்த 1 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

Update: 2021-07-19 16:20 GMT
கோவை

டெல்லியில் இருந்து ரெயிலில் கடத்தி வந்த ரூ.1¼ கோடி போதைப் பொருட்கள் கோவையில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நைஜீரிய நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது

போதை பொருள் கடத்தல்

டெல்லியில் இருந்து கோவை வழியாக கேரளாவை நோக்கி செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் விலை உயர்ந்த போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அவர்கள் சென்னை மற்றும் மதுரையில் செயல்பட்டு வரும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். 


இதைத்தொடர்ந்து கோவை ரெயில் நிலையத்தில் சென்னை மற்றும் மதுரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வந்து உஷார்படுத்தப்பட்டனர்.

பயணிகளிடம் சோதனை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்  கோவை ரெயில் நிலைய 1-வது நடைமேடைக்கு வந்து நின்றது.

 அப்போது அந்த ரெயிலில் இருந்து இறங்கிய பயணிக ளை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கோவை ரெயில்வே போலீசாருடன் இணைந்து தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது, ரெயிலில் இருந்து இறங்கிய வெளிநாட்டு வாலிபர் ஒருவ ரின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். 

நைஜீரிய வாலிபர் கைது

உடனே அவர் வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் 2 கிலோ 375 கிராம் போதைப் பொருட்கள் (ஆம்பிட்டமின்) வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவர் நைஜீரியாவை சேர்ந்த எக்வின் கிங்ஸ்லி (வயது 26) என்பது தெரியவந்தது. உடனே அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,போது, கோவை வந்த ரெயிலில் சோதனை நடத்தி போதை பொருள் கடத்தி வந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த எக்வின் கிங்ஸ்லியை கைது செய்து உள்ளோம். 

அவரிடமிருந்து  8 சிறிய பாக்கெட்டுகளில் இருந்த ரூ.1¼ கோடி மதிப்பிலான 2 கிலோ 235 கிராம் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

வேறு யாருக்கு தொடர்பு

இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

எக்வின் கிங்ஸ்லியை மதுரைக்கு அழைத்து செல்ல திட்டமிட்டு உள்ளோம் என்றனர்.ரெயிலில் போதைப் பொருட்கள் கடத்திய நைஜீரிய வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்