கல்லணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் கொரோனாவை மறந்து குதூகலம்
கல்லணையில் நேற்று குவிந்த சுற்றுலா பயணிகள் கொரோனாவை மறந்து குதூகலித்தனர்.
திருக்காட்டுப்பள்ளி,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல வாரங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு, தற்போது கடைகள் அனைத்தையும் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று திருச்சி, தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கல்லணையில் குவிந்தனர். இதனால் சுற்றுலா தலமான கல்லணை களை கட்டியது.
கல்லணைக்கு வரும் நான்கு புறங்களிலும் இருந்து ஏராளமான மக்கள் இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள், வேன்களில் வந்து கல்லணையின் அழகை சுற்றி பார்த்து குதூகலித்தனர்.
கல்லணை பாலங்களின் மேல் நின்று கொண்டு ஓடும் தண்ணீரின் அழகை ரசித்தனர். சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.
கல்லணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கல்லணையை பார்க்க வந்த மக்கள் கல்லணை காவிரி பாலத்தின் உள்ளே இறங்கி நீர் வெளியேறும் பகுதியில் தொட்டி போன்று அமைக்கப்பட்டு உள்ள இடத்தில் ஆனந்த குளியல் போட்டனர். ஏராளமான மக்கள் வந்ததால் கல்லணை பாலங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாமன்னன் கரிகாலன் சிலையில் இருந்து அகத்தியர் சிலை வரை பாலத்தின் 2 பகுதிகளிலும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.
இதனால் இந்த பகுதியில் மிகக்கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புதிதாக கட்டப்பட்ட கொள்ளிடம் பாலத்தின் வழியாக கார்கள் வேன்கள் அனுமதிக்கப்பட்டு இருந்த போதிலும் கல்லணை பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வரும் வாரங்களில் மேலும் அதிகமாக கூட்டம் கூடும் என்பதால் அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பொதுப்பணித்துறை மற்றும் போலீசார் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கல்லணை சுற்றிப்பார்க்க வந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
கொரோனா 3-வது அலை பரவும் அபாயம் உள்ள நிலையில் நேற்று கல்லணையில் குவிந்த மக்கள் பெரும்பாலானோர் கொரோனாவை மறந்தது போல வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டனர். பலர் முககவசம் கூட அணியவில்லை. சமூக இடைவெளியையையும் கடைப்பிடிக்கவில்லை. இதனால் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவ வாய்ப்பு உள்ளதோ? என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கல்லணை போன்ற சுற்றுலா தலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.