கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக மீன்பிடிக்க செல்லாத ஆறுகாட்டுத்துறை மீனவர்கள்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. நேற்று ஒரே நாளில் 700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையில் 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 65 விசைப்படகுகளும் உள்ளன. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். முற்றிலும் மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து வரும் இந்த மீனவர்கள் நாள்தோறும் காலை, மாலை என இருவேளைகளிலும் பைபர் படகிலும், தங்கி மீன் பிடிக்க விசைப்படகுகளிலும் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
கடந்த ஒரு சில நாட்களாக மீன்கள் அதிக அளவில் கிடைக்காததால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். நேற்று முன்தினம் அதிக அளவில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று பாறை மீன், ஷீலா மீன், நண்டு, இறால் உள்ளிட்ட மீன்களை பிடித்து வந்தனர். மீன்களுக்கும் நல்ல விலை கிடைத்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நாள்தோறும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆறுகாட்டுத்துறையில் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என ஒரு நாள் ஊர் மறியல் செய்வதாக (மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக் கூடாது) பஞ்சாயத்தார்கள் அறிவித்தனர்.
இதை தொடர்ந்து ஆறுக்காட்டுத்துறை மீனவர்கள் யாரும் நேற்று மீன்பிடிக்க செல்லாமல் ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
ஒரேநாளில் 700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது மீதமுள்ள மீனவர்களுக்கு இன்னும் ஓரிரு நாளில் தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தாங்கள் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.