புதர் மண்டி காணப்படும் புதிய பஸ் நிலையம் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு விடப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

கூத்தாநல்லூரில் சேதமடைந்து புதர் மண்டி காணப்படும் புதிய பஸ் நிலையத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு விடப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2021-07-19 06:12 GMT
கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில், லெட்சுமாங்குடி சாலையின் எதிரில், புதிய நகராட்சி அலுவலகம் அருகே கூத்தாநல்லூர் புதிய பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இந்த புதிய பஸ் நிலையத்திற்கு திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் இருந்து வரும் பஸ்கள் வந்து பயணிகளை ஏற்றி சென்றது. ஆனால் இந்த பஸ்கள் ஒரு சில வாரங்களே சென்ற வந்ததாகவும், அதன் பிறகு செல்லவில்லை எனவும் பயணிகள் தெரிவித்தனர்.

பஸ்கள் வந்து செல்லாததால் பயணிகளும் பஸ்நிலையத்திற்கு வருவதில்லை. இதனால் இந்த பஸ் நிலையம் பராமரிப்பு இன்றி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் செடி, கொடிகள் மண்டி புதர் போல் காட்சி அளிக்கிறது.

பெரும் செலவில் கட்ப்பட்ட பஸ்நிலைய கட்டிடம் பயன்பாடு இன்றி அரசு பணம் வீணாவது வேதனை அளிப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.

எந்த காரணத்திற்காக பஸ் நிலையம் பயன்பாடு இல்லாமல் இருப்பது புரியாத புதிராக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த கட்டிடம் சீரமைக்காவிட்டால் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்து புதர் மண்டி காணப்படும் கூத்தாநல்லூர் புதிய பஸ் நிலையம் கட்டிடத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்