ஈரோட்டில் டெங்கு தடுப்பு பணிக்கு 300 பேர் நியமனம்; மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தகவல்

ஈரோட்டில் டெங்கு தடுப்பு பணிக்கு 300 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

Update: 2021-07-18 22:02 GMT
ஈரோடு
ஈரோட்டில் டெங்கு தடுப்பு பணிக்கு 300 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்தார்.
பருவமழை
தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்க உள்ளதையடுத்து வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அனைத்து வகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து, அடுத்தக்கட்ட பணியாக டெங்கு தடுப்பு பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
அதன்படி, ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் உள்ள 60 வார்டுகளிலும் மழை நீர் வடிகால்களாக உள்ள கழிவு நீர் சாக்கடைகளை தூர்வாரும் பணியும், டெங்கு தடுப்பு பணியாக வீடு வீடாக சென்று ஆய்வு செய்து, கொசு ஒழிப்பு, கொசு புழுக்கள் அழிப்பு பணியிலும் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
300 பேர் நியமனம்
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
மாநகராட்சி பகுதியில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், மற்ற பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே சாக்கடைகள் தூர்வாரப்பட்டு, குப்பைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
மேலும், டெங்கு தடுப்பு பணிக்கு 4 மண்டலங்களிலும் 300 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்து கொசுப்புழு, கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மக்கள் வீட்டினையும், வீட்டின் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரித்து தண்ணீர் தேங்காமல், கொசுக்கள் உற்பத்தியாகாமல் வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்