சேலம் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க தீவிர நடவடிக்கை-போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் தகவல்

சேலம் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் கூறினார்.

Update: 2021-07-18 21:56 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் கூறினார்.
பணி இடமாறுதல்
சேலம் மாவட்ட போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் போலீசாருக்கு பணி இடமாறுதல் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. முகாமுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் தலைமை தாங்கினார். அவர் இடமாறுதலுக்கு விண்ணப்பித்தவர்களிடம் விசாரணை நடத்தி பணி மாறுதலுக்கான ஆணையை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் ஒரே போலீஸ் நிலையத்தில் 3 ஆண்டுகள், ஒரே உட்கோட்டத்தில் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாருக்கு பணியிட மாறுதல் வழங்குவதற்காக இந்த முகாம் நடத்தப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 3 அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உள்பட 36 போலீஸ் நிலையங்களில் பணியாற்றிய 400 போலீசாருக்கு அவரவர் விருப்பத்தின் பேரில் இடமாறுதல் வழங்கப்பட்டு உள்ளது.
பெண்கள் உதவி மையம்
மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஒவ்வொரு கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பெண்கள் உதவி மையம் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த மையங்களுக்கு இதுவரை 20 புகார்கள் வந்துள்ளன. ஆதரவற்ற 3 மூதாட்டிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். 
முகாமில் கூடுதல் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், செல்வன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்