முன்விரோதத்தில் வாலிபர் படுகொலை

பெலகாவி அருகே முன்விரோதத்தில் வாலிபரை வெட்டிக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2021-07-18 20:55 GMT
பெங்களூரு:

வாலிபர் கொலை

  பெலகாவி மாவட்டம் கோகாக் அருகே வசித்து வந்தவர் மஞ்சு சங்கர்(வயது 23). இவர், வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வெளியே சென்ற அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. மஞ்சு சங்கரை, அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியும், விசாரித்தும் பார்த்தார்கள். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை.

  இந்த நிலையில், நேற்று காலையில் கோகாக் அருகே மகாந்தேஷ்நகரில் ஒரு வாலிபர் பலத்த வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கோகாக் போலீசாருக்கு தகவல் தொிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அவர், மஞ்சு சங்கர் என்று அடையாளம் காணப்பட்டது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

  மேலும் நேற்று முன்தினம் நள்ளிரவு வேறு இடத்தில் வைத்து மஞ்சு சங்கரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்திருப்பதும், பின்னர் நேற்று அதிகாலையில் அவரது உடலை மகாந்தேஷ் நகர் பகுதியில் வீசிச் சென்றிருப்பதும் தெரியவந்தது. ஆனால் மஞ்சு சங்கரை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை.

  மஞ்சு சங்கரை, அவருக்கு நன்கு தெரிந்த நபர்களே முன்விரோதத்தில் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து கோகாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்