வங்கிகளை தனியார் மயமாக்கினால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கும் - சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி கோபால்கவுடா பேச்சு
வங்கிகளை தனியார் மயமாக்கினால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கோபால்கவுடா கூறினார்.
பெங்களூரு:
அடித்தளம் இடப்பட்டது
வங்கிகள் அரசுடமை ஆக்கப்பட்டதின் 53-வது ஆண்டு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி கோபால்கவுடா கலந்து கொண்டு பேசியதாவது:-
1969-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து வங்கிககளை அரசுடமை ஆக்கினார். அதனால் விவசாயிகள், வேலையில்லா இளைஞர்கள், சாமானிய மக்களுக்கு பெரும் பயன் கிடைத்தது. ஆனால் 1991-ம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, வங்கிகளை தனியார் மயமாக்கும் பணிக்கு அடித்தளம் இடப்பட்டது.
அரசியல் சாசனத்திற்கு எதிரானது
இதை தற்போது உள்ள பா.ஜனதா அரசு முன்னெடுத்து செல்கிறது. இதை நாம் அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும். வங்கிகளை தனியார் மயமாக்கினால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கும். அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இதனால் சமூகநீதி மாயமாகிவிடும்.
இவ்வாறு கோபால் கவுடா பேசினார்.
கர்நாடக ஐகோா்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி நாகமோகன்தாஸ் பேசுகையில், "சட்டசபை, நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்றும் யாருடைய கட்டுப்பாட்டிலும் இருக்கக்கூடாது. ஆனால் நாட்டில் தற்போது இந்த துறைகள் சுதந்திரமாக செயல்படும் நிலை இல்லை. பெரு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு முதலாளிகள் அரசை கட்டுப்படுத்துகிறார்கள்.
சமூகநீதிக்கு ஆபத்து
நீதித்துறை மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். நாட்டில்-அரசு தனியார் அமைப்புகள் இருக்க வேண்டும். ஆனால் பாதுகாப்பு, ஆராய்ச்சி, வளர்ச்சி, நிதி விஷயங்கள் போன்றவை அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டு விடும். நாட்டில் 60 சதவீத சொத்து 1 சதவீத பணக்காரர்களிடம் உள்ளது. இதனால் ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. தனியார்மயத்தால் சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது" என்றார்.