வாலிபர் கத்தியால் குத்திக்கொலை

பல்லடம் அருகே வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட சிறுவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-07-18 20:43 GMT
பல்லடம்
பல்லடம் அருகே வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட சிறுவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பனியன் நிறுவன தொழிலாளி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வீரபாண்டி திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் திலகர். இவருடைய மகன் பிரவீன் (வயது 20). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பனியன் நிறுவனத்திற்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் பிரவீன், கெம்பேநகரில் உள்ள தனது நண்பர்களை பார்க்க முடிவு செய்தார். அதன்படி கெம்பே நகருக்கு நேற்று மாலை 6 மணிக்கு சென்றார். பின்னர் அங்கு தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது சற்று தொலைவில் 17 வயது மதிக்கத்தக்க 3 சிறுவர்கள் செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களுக்குள் செல்போன் பார்ப்பது தொடர்பாக திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். 
குத்திக்கொலை
இதை பார்த்துக்கொண்டிருந்த பிரவீன் உடனே ஓடிச்சென்று அவர்களை சமாதானம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. ஆனாலும் அந்த சிறுவர்கள் சமாதானம் அடையவில்லை. அப்போது அவர்களில் ஒரு சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீனை குத்தியுள்ளான். இதனால் நிலை குலைந்த பிரவீன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதைபார்த்த அந்த 3 சிறுவர்களும் அங்கிருந்து தப்பிஓடிவிட்டனர். உடனே பிரவீனை அவருடைய நண்பர்களும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பிரவீனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
 இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று பிரவீன் உடலை பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 சிறுவர்களை தேடி வருகிறார்கள். 
செல்போன் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் சமாதானம் செய்ய சென்ற வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்