வங்கியில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த நபர் கைது - போலீசார் தீவிர விசாரணை
கனகபுராவில் கவரிங் நகைகளை அடகு வைப்பதற்காக வங்கியில் போலி சான்றிதழை சமர்ப்பித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெங்களூரு:
நகைகள் மீட்கப்படவில்லை
ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா சாத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வங்கி உள்ளது. இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக கொன்னிகனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜண்ணா என்பவர் பணியற்றி வந்தார்.
இந்த நிலையில், அந்த வங்கியில் தங்க நகைகளை அடகு வைத்திருந்த 300-க்கும் மேற்பட்ட நபர்கள், பல ஆண்டுகளாக தங்களது நகைகளை மீட்காமலும், வட்டி எதுவும் செலுத்தாமலும் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து, 300-க்கும் மேற்பட்ட நபா்கள் அடகு வைத்திருந்த தங்க நகைகளை ஏலத்தில் விடுவதற்கு வங்கி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தது.
கவரிங் நகைகள்
இதையடுத்து, அந்த தங்க நகைகளை எடுத்து பரிசீலனை நடத்தப்பட்டது. அப்போது 40 நபர்கள் அடகு வைத்திருந்த தங்க நகைகள் முற்றிலும் போலியானது என்றும், அது கவரிங் நகைகள் என்பதும் தெரியவந்தது. 200-க்கும் மேற்பட்ட நபர்கள் அடகு வைத்திருந்த நகைகளில், பாதிக்கு மேல் தங்கத்தின் அளவு குறைந்திருந்ததும் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதும், நகைகளை அடகு வைத்திருப்பவர்களின் முழுமையான தகவலும் வங்கிக்கு கிடைக்காமல் இருந்தது.
இதுபற்றி சாத்தனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த வங்கியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய அதிகாரிகள் சிலருடன் சேர்ந்து, இந்த மோசடியில் ராஜண்ணா ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது. கவரிங் நகைகளை, உண்மையான தங்க நகைகள் என்று சான்றிதழ் வழங்கி, அந்த நகைகளை வங்கியில் அடகு வைத்து பல லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று ராஜண்ணா மோசடியில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது.
கைது
மேலும் தனது கிராமத்தில் வசிக்கும் நபர்கள் பெயரில் போலி சான்றிதழை வங்கியில் சமர்ப்பித்து, ராஜண்ணாவே தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி இந்த மோசடியில் ஈடுபட்டு இருந்தார். அந்த நகைகள் உண்மையானவை என ராஜண்ணா சான்றிதழ் வழங்குவதால், அதனை பரிசீலிக்காமல் வங்கி அதிகாரிகளும் நகைகளை வாங்கிக்கொண்டு கடன் கொடுத்து வந்துள்ளனர். இந்த மோசடியில் ராஜண்ணாவும், இதற்கு முன்பு அந்த வங்கியில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் ஈடுபட்டு இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, ராஜண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற அதிகாரிகள், ஊழியர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். கைதான ராஜண்ணா மீது சாத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.