நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

ஆடி மாதம் பிறந்ததையொட்டி நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2021-07-18 20:36 GMT
நாகர்கோவில்:-
ஆடி மாதம் பிறந்ததையொட்டி நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆடி மாதம்
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். எனினும் கடந்த சில நாட்களாக கோவில்களில் பக்தர்கள் கூட்டம் பெரிய அளவில் இல்லை.
இந்த நிலையில் ஆடி மாதம் பிறந்ததை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்கள் உள்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் திரளாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் பக்தர்கள் திரண்டனர். இதைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை
கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. திரளான ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து நாகராஜரை வழிபட்டனர். முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு சானிடைசர் வழங்கப்பட்டது. அனைத்து பக்தர்களும் முககவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த கோவிலில் நாகர் சிலைக்கு பால் ஊற்றி வழிபடுவது முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. எனவே இந்த வழிபாட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்