தஞ்சைஅருகே பயங்கரம்: தனியார் நிறுவன காவலாளி அடித்துக்கொலை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தஞ்சை அருகே தனியார் நிறுவன காவலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-07-18 20:12 GMT
ஜெயபால் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தை போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் பார்வையிட்டார்.
தஞ்சாவூர்:-

தஞ்சை அருகே தனியார் நிறுவன காவலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். 

தனியார் நிறுவன காவலாளி

தஞ்சையில் நாகை சாலையில் உள்ள விஜயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது74). இவர் தஞ்சை அருகே தளவாய்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பிளாஸ்டிக் பைப் கம்பெனியில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு ஜெயபால் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை பிளாஸ்டிக் பைப் கம்பெனியின் உரிமையாளரின் சகோதரர் தர்மராஜ் அங்கு வந்தார். அப்போது ஜெயபால் தலையில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கம்பெனி வாசலில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை

உடனடியாக அவர் இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர்சஞ்சய், பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு அனந்தன், இன்ஸ்பெக்டர் பேபி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் ஜெயபால் உடலை கைப்பற்றி அம்மாபேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஸ்கூட்டர்- செல்போன் கொள்ளை

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் பிளாஸ்டிக் கம்பெனியில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை திருட வந்தபோது இரவு நேர காவலாளியான ஜெயபால் அதை தடுத்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கல்லால் ஜெயபாலை கடுமையாக தாக்கி உள்ளனர்.
இதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அவரிடமிருந்த செல்போன், அவரது ஸ்கூட்டர் ஆகியவற்றை எடுத்து கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது.

வலைவீச்சு

சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கொலை செய்து ஸ்கூட்டர் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்