திண்டுக்கல் பஸ் நிலையத்தில் முக கவசத்தின் அவசியத்தை மறந்த பயணிகள்
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் முக கவசத்தின் அவசியத்தை மறந்து பயணிகள் திரிந்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதையொட்டி ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் பொதுமக்கள் தங்களுக்கு தொற்று ஏற்படாது என்பது போல் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.
அதாவது பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிவது, முக கவசம் அணிந்திருந்தாலும் அதை முழுமையாக அணியாமல் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் காத்திருக்கின்றனர். இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று தெரிந்தே அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக உள்ளது.
இதேபோன்று மார்க்கெட், மளிகை கடை, வணிக வளாகங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்போது முக கவசம் அணியாமல் பலர் சுற்றித்திரிய தொடங்கியுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் கொரோனா 3-வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கை நம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.