இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி ஜோதி திருச்சி வந்தது
இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி ஜோதி திருச்சி வந்தது. ராணுவ அதிகாரிகள், என்.சி.சி. மாணவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
திருச்சி,
இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி ஜோதி திருச்சி வந்தது. ராணுவ அதிகாரிகள், என்.சி.சி. மாணவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
போர் வெற்றி
இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் 50-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக ‘ஸ்வர்னிம் விஜய் வருஷ்' என்ற வெற்றி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த வெற்றி விழாவை நாடெங்கும் மக்களிடம் கொண்டு செல்வதன் மூலம் மக்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் நரேந்திரமோடியால், தேசிய போர் நினைவு சின்னத்தில் இருந்து ஏற்றப்பட்ட வெற்றி ஜோதியானது நம் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
திருச்சிக்கு வருகை
குறிப்பாக 1971-ல் நடந்த இந்த போரில் நம் நாட்டிற்காக இன்னுயிர் நீத்து, ராணுவத்தின் மிக உயரிய விருதுகளான பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா ஆகிய விருதுகளை பெற்ற ராணுவ வீரர்களின் கிராமங்களுக்கும் இந்த வெற்றி ஜோதி கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஜோதியானது நேற்று மதுரையில் இருந்து திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது.
வெற்றி ஜோதியை திருச்சி கல்லுக்குழியில் ராக்போர்ட் என்.சி.சி. குரூப்ஸ் சார்பில் 4 தமிழ்நாடு கேர்ல்ஸ் பட்டாலியனின் கமாண்டிங் ஆபீசர் பெற்று கொண்டார். அப்போது என்.சி.சி. மாணவர்கள் அனைவரும் சாலையில் இருபுறமும் வரிசையாக நின்று வெற்றி ஜோதிக்கு மரியாதை செலுத்தினார்கள்.
ராணுவ மரியாதை
என்.சி.சி. தலைமையகத்தில் இந்த வெற்றி ஜோதிக்கு கார்ட் ஆப் ஹானர் முறையில் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு மலர்வளையம் வைத்து இன்னுயிர் நீத்தவீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற என்.சி.சி. ராக்போர்ட் குரூப்பின் தலைமைஅதிகாரி கர்னல் இளவரசன், ராணுவவீரர்களின் தியாகம் குறித்து பேசினார். இந்த வெற்றி ஜோதியானது திருச்சி புனித ஜோசப் கல்லூரி, தேசிய கல்லூரி ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இன்று (திங்கட்கிழமை) காலை தஞ்சை விமானப்படைதளத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.