வால்பாறையில் கொட்டும் மழையில் தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்

வால்பாறையில் கொட்டும் மழையில் தடுப்பூசி போட பொது மக்கள் குவிந்தனர். ஆனால் பற்றாக்குறை காரணமாக ஏராளமா னோர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Update: 2021-07-18 18:03 GMT
வால்பாறை

வால்பாறையில் கொட்டும் மழையில்  தடுப்பூசி போட பொது மக்கள் குவிந்தனர். ஆனால் பற்றாக்குறை காரணமாக ஏராளமா னோர் ஏமாற்றத்துடன் திரும்பினர். 

கொரோனா தடுப்பூசி 

வால்பாறையில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இதனால் இந்தப்பகுதியை சேர்ந்த 13 ஆயிரத்து 877 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். இந்த நிலையில் பற்றாக்குறை காரணமாக கடந்த 3-ந் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடவில்லை. மலை வாழ் மக்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. 

கொட்டும் மழையில் குவிந்தனர் 

தற்போது 2 வாரங்களுக்கு பிறகு வால்பாறை பகுதிக்கு தடுப்பூசி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து  வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனால் அங்கு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர்.

அப்போது மழை பெய்தது. இருந்தபோதிலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைகளை பிடித்தபடி அவர்கள் அங்கு தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்து நின்றனர். 

இந்த நிலையில் தடுப்பூசி குறைவாக இருப்பதால் கோவிஷீல்டு, கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி மட்டுமே போடப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். 

ஏமாற்றத்துடன் திரும்பினர் 

இதனால் முதல் தவணையாக தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். அதுபோன்று 2-வது தவணையாக தடுப்பூசி போட காத்திருந்தவர்களும், பற்றாக்குறை காரணமாக பலர் தடுப்பூசி போட முடியாமல் திரும்பி சென்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- 

வால்பாறை மலைப்பகுதிக்கு தற்போது பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்க இங்கு வசித்து வரும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

கூடுதலாக ஒதுக்கீடு 

ஆனால் சுற்றுலா மைய பகுதியான வால்பாறைக்கு குறைந்த அளவே தடுப்பூசி ஒதுக்கப்பட்டு வருவது ஏமாற்றமாக இருக்கிறது. 

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, வால்பாறை பகுதிக்கு தேவையான அளவுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்து, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்