போளூர் அருகே மின்வேலியில் சிக்கி இறந்த வாலிபர் உடலை ஆற்றில் வீசியது அம்பலம்
போளூர் அருகே நடந்த சம்பவத்தில் பலியான வாலிபர் நிலத்துக்கு ெசன்றபோது மின்வேலியில் சிக்கி இறந்தது உறுதியானது. இந்த சம்பவம் தொடர்பாக அங்கு அனுமதியின்றி மின்வேலி அமைத்த விவசாயி மகனுடன் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை
வாலிபர் மர்மச்சாவு
போளூர் தாலுகா மண்டகொளத்தூர் மதுரா பேட்டைத் தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 31). இவர் கடந்த 15-ந் தேதி இரவு 10 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அடுத்தநாள் இரவு அந்த பகுதியை சேர்ந்த நடேசன் என்பவரது நிலத்தின் அருகில் ஆற்றங்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து முரளியின் மனைவி தீபா தனது கணவவ் சாவில் சந்தேகம் இருப்பதாக போளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இச்சம்பவ குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மற்றும் போலீசார், தடயவியல் வல்லுனர்கள், மின்வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
தந்தை- மகன் கைது
பிரேத பரிசோதனையில் முரளி மின்சாரம் பாய்ந்து இறந்திருப்பது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் பாலசுந்தரம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சுற்றி சட்ட விரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. 15-ந் தேதி இரவு பாலசுந்தரத்தின் மகன் சிவக்குமார் (22) அந்த மின்வேலிக்கு மின் இணைப்பை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை சிவக்குமார் நிலத்திற்கு சென்றபோது முரளி மின்வேலியில் சிக்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
உடனே தனது தந்தை பாலசுந்தரத்தை வரவழைத்து இருவரும் சேர்ந்து மின்வேலியில் சிக்கி இறந்த முரளியின் உடலை நிலத்தின் ஓரம் செய்யாற்றில் வீசிவிட்டு சென்று உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தது, தடையங்களை மறைத்து, கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுந்தரம் மற்றும் அவரது மகன் சிவக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.