நெல் மூட்டைகள் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.
கொரடாச்சேரி:
அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.
கலெக்டர் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் எண்கண் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேற்று திடீரென ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் நடத்தப்படும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நேரடியாக கள ஆய்வு செய்யப்பட்டதில் 14,016 டன் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
அதனை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகர்வு செய்திட நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
14,016 டன் நெல் மூட்டைகள்
அதனடிப்படையில் 14,016 டன் நெல் மூட்டைகள் முழுவதும் பாதுகாப்பாக திறந்தவெளி சேமிப்பு மையம், சேமிப்பு கிடங்குகள் மற்றும் நெல் அரவைக்காக உள்மண்டலம், அயல் மண்டலங்களுக்கு நகர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இப்பருவத்தில் தற்போது வரையில் கொள்முதல் செய்யப்பட்ட 26,042 டன் எடையுள்ள நெல் மூட்டைகள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்வு செய்யப்பட்டுள்ளது.
தேங்காமல் நடவடிக்கை
மேலும், தினசரி கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை தேக்கம் அடையாமல் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லநடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திருவாரூர் மாவட்ட மேலாளர்கள் பாஸ்கரன், தியாகராஜன், துணை மேலாளர் ராஜேந்திரன், உதவி மேலாளர் மூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.