பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் குட்கா பறிமுதல்
லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள குடுகா பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டது.
அணைக்கட்டு
போலீசார் வாகன சோதனை
பள்ளிகொண்ட சுங்கச்சாவடியில் பள்ளிகொண்டா போலீசார் இரவு நேரங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி நேற்று இரவு 9 மணிக்கு பள்ளிகொண்டா சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் முத்து, மணிவண்ணன், விநாயகம் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி சுங்கச்சாவடியை கடக்க முயன்றது.
அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த லாரியை மடக்கி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் லாரியில் இருந்த டிரைவர் முன்னுக்குப்பின் முரணான பதில்களை கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து சோதனை செய்தனர்.
குட்கா பறிமுதல்
சோதனையின்போது பார்சல் பெட்டிகளுக்கு நடுவில் சுமார் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 1,600 கிலோ புகையிலை மற்றும் குட்கா அடங்கிய பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து லாரியில் இருந்த மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை தாம்பரம் ஓல்டு பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த குண்டுமலை மகன் ராஜகுருவி (வயது 25), விழுப்புரம் மரக்காணம் நடுகுப்பத்தை சேர்ந்த சேட்டு மகன் குமார் (30), தூத்துக்குடி மாவட்டம் அனையாபுரம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் கோபால் (30) என்பதும், பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 3 பேர்மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் லாரி மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.