தேயிலை விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க கோரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் தேயிலை விவசாயிகளுக்கு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2021-07-18 17:18 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் தேயிலை விவசாயிகளுக்கு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தேயிலை சாகுபடி

நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர். ஊட்டி, மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதாலும், இதமான காலநிலை நிலவுவதாலும் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. விவசாயிகள் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்து வருகின்றனர்.

இன்கோசர்வ், தேயிலை வாரியம் மாதந்தோறும் தேயிலை கிலோ ஒன்றுக்கு சராசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி தொழிற்சாலைகள் கொள்முதல் செய்யும் பச்சை தேயிலைக்கான விலையை விவசாயிகளுக்கு வழங்குகின்றனர்.

நிலுவை தொகை

இதற்கிடையே மாதாந்திர விலை அடிப்படையில் பச்சை தேயிலை கொள்முதல் செய்யாமல், சில தொழிற்சாலைகள் குறைந்த விலைக்கு எடுக்கிறது. மேலும் விவசாயிகளுக்கு முழு தொகை வழங்காமல் நிலுவைத்தொகை வைத்து இருக்கிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நீலகிரி மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, மாதாந்திர விலை நிர்ணயம் செய்து உரிய முறையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இருப்பினும் சில தேயிலை தொழிற்சாலைகள் மாதாந்திர விலையை முழுமையாக வழங்குவது இல்லை. இதனால் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை ரூ.1 கோடிக்கு மேல் வழங்க வேண்டி உள்ளது. இதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பராமரிப்பு பணிகள்

தேயிலை விவசாயிகளுக்கு குறைந்த அளவு முன்பணம் மட்டும் வழங்குவது போதுமானதாக இல்லை. இதனால் தோட்டங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள சிரமம் ஏற்படுகிறது.

இன்கோசர்வ் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் லாபம் கிடைக்கிறது. 

இதனை உட்கட்டமைப்பு பணிகளுக்கு செலவிட வேண்டும்.
அதே நேரத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை வழங்கி தேயிலை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்