ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.

Update: 2021-07-18 16:45 GMT
ராமேசுவரம்,
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.
ரோந்துக்கப்பல்கள்
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 3 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர்.
மேலும் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து கடலில் வீசி எறிந்துள்ளனர். இதனால் நேற்று காலை குறைந்த அளவிலான மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினார்கள். 
தொடர் சம்பவம்
மீன் பிடி தடைக்காலம் முடிந்து கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதிதான் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது இருந்தே இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களும், வலைகள் சேதப்படுத்தப்படும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இதனால் ராமேசுவரம் பகுதியில் 700-க்கும் அதிகமான படகுகள் உள்ள நிலையில் 400-க்கும் குறைவான படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை கடற்படையின் தொல்லை இல்லாமல் தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்