கூடுதல் கட்டணம் வசூல்: கழிப்பறைக்கு செல்ல கடன் கேட்டு கலெக்டரிடம் வாலிபர் மனு விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலித்ததால் கழிப்பறைக்கு செல்ல கடன் கேட்டு கலெக்டரிடம் வாலிபர் மனு கொடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-18 15:54 GMT
விழுப்புரம், 

கூடுதல் கட்டணம் வசூல்

விழுப்புரம் அருகே உள்ள குமாரக்குப்பம் தொட்டியாந்தோப்பு தெருவை சேர்ந்தவர் பழனி மகன் பிரகாஷ்(வயது 35). இவர் சொந்த வேலை காரணமாக வெளியூர் செல்வதற்காக நேற்று அதிகாலை விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். சிறுநீர் கழிப்பதற்காக அங்குள்ள கட்டண கழிப்பறைக்கு பிரகாஷ் சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்தவர், சிறுநீர் கழிக்க 5 ரூபாயும், மலம் கழிக்க 10 ரூபாயும் தர வேண்டும் என்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் கழிப்பறை ஊழியரிடம் சிறுநீர் கழிக்க 1 ரூபாயும், மலம் கழிக்க 2 ரூபாயும் தானே கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, எதற்காக கூடுதல் கட்டணம் கேட்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு ஊழியர் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. 

கலெக்டரிடம் கடன் கேட்டு மனு

இதையடுத்து பிரகாஷ், மாவட்ட கலெக்டர் மோகனை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில், விழுப்புரம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் இயங்கி வரும் கட்டண கழிப்பறையில் சிறுநீர் கழிக்க 5 ரூபாயும், மலம் கழிக்க 10 ரூபாயும் வசூல் செய்கின்றனர். ஆனால் என்னிடம் ஒரு ரூபாய் மட்டுமே உள்ளது. இதனால் இயற்கை உபாதை கழிக்க கழிப்பறைக்கு செல்ல முடியவில்லை. ஆகவே கழிப்பறைக்கு செல்ல நீங்கள் 9 ரூபாயை கடனாக தந்து உதவ வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 

எச்சரிக்கை

மனுவை பெற்ற கலெக்டர் மோகன், உடனடியாக விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறைக்கு சென்று, அங்கு பணியில் இருந்த ஊழியரிடம் கழிப்பறையில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை கேட்டறிந்ததோடு, பொதுமக்களிடம் இனிமேல் கூடுதல் கட்டணம் வசூலித்தால், உடனடியாக ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். கழிப்பறை முன்பு அரசு நிர்ணயித்த கட்டணத்தை பலகையில் எழுதி வைத்து, வசூலிக்க வேண்டும் என எச்சரித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்