மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

Update: 2021-07-18 13:03 GMT
திருப்பூர்
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். 
தென்னம்பாளையம் சந்தை
திருப்பூர் தென்னம்பாளையத்தில் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் மீன், இறைச்சி, காய்கறி உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இந்த சந்தைக்கு வந்து வாங்கி செல்கிறார்கள். கொரோனா பாதிப்பின் காரணமாக சந்தைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் வழக்கமான நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பூரில் மீன், இறைச்சி, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்க பலரும் குவிந்து வருவது வழக்கம்.
மீன் வாங்க குவிந்தனர்
அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், கொரோனா ஊரடங்கு தளர்வின் எதிரொலியாலும் தென்னம்பாளையம் சந்தையில் மீன் உள்ளிட்டவைகளை வாங்க ஏராளமானவர்கள் காலையில் இருந்தே குவியத்தொடங்கினர். சிறிது நேரத்தில் கூட்டம் அலைமோதியது. நேரம் செல்ல செல்ல பொதுமக்கள் பலரும் குவிந்தனர். பலரும் தங்களுக்கு தேவையானவற்றை முண்டியடித்துக்கொண்டு வாங்கி சென்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தை மூடப்பட்டதால், மீன் கடைகள் சந்தை அருகே உள்ள பகுதிகளில் பலர் அமைத்திருந்தனர். இங்கு மீன் பிரியர்கள் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர். நேற்று காலையில் சாரல் மழை பெய்த நிலையிலும் பலர் குடைகளை பிடித்தவாறு மீன் மற்றும் காய்கறிகளை வாங்கி சென்றனர். மழையின் காரணமாக சந்தையில் பல பகுதிகளில் சேறும், சகதியுமாக காணப்பட்டது.
விலை விவரம்
அதன்படி நேற்று ஒரு கிலோ மத்தி மீன் ரூ.250க்கும், வஞ்சிரம் ரூ.1000க்கும், சங்கரா ரூ.350க்கும், கட்லா ரூ.150-க்கும், நெய்மீன் ரூ.120க்கும், நெத்திலி ரூ.250க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுபோல் கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரையிலும், பாகற்காய் ரூ.30 முதல் ரூ.40 வரைக்கும், பீட்ரூட் ரூ.40க்கும், பீன்ஸ் ரூ.70கும், அவரை ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதற்கிடையே கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் நேற்று தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு நேற்று காய்கறி, இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்ட வகைகளை வாங்க ஏராளமானவர்கள் வந்தனர்.
இதில் முககவசம் அணியாமல் வந்த பலருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஏற்கனவே மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. இந்த இடத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்