நெல்விதைகள் இருப்பு
குறுவை சாகுபடிக்குத் தேவையான நெல் விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மடத்துக்குளம் வட்டார வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போடிப்பட்டி
குறுவை சாகுபடிக்குத் தேவையான நெல் விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மடத்துக்குளம் வட்டார வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீர் வரத்து அதிகரிப்பு
அமராவதி அணையை அடிப்படையாகக் கொண்டு மடத்துக்குளம் வட்டார விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அமராவதி அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதாலும் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் குறுவை பருவத்தில் நெல் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே குறுவைக்கு ஏற்ற நெல் ரகங்களை மடத்துக்குளம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையினர் இருப்பு வைத்து மானிய விலையில் வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து மடத்துக்குளம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உதவி இயக்குனர் கூறியதாவது:- மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் தற்போது சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டும் ரகமாக கோ 51 உள்ளது. இந்த சன்ன ரக நெல் 110 முதல் 115 நாட்கள் வயது கொண்ட குறுகிய கால ரகமாகும். மேலும் வறட்சி மற்றும் பூச்சி, நோய் தாக்குதலைத் தாங்கி வளரக் கூடியதாகும். இந்த ரகமானது அதிக மகசூல் தரக்கூடிய உயர் விளைச்சல் ரகமாகும். இந்த ரக விதைகளை குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கும் நோக்கத்தில் விதை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது.
விதை உற்பத்தி
கடந்த சம்பா பருவத்தில் பாப்பான்குளத்திலுள்ள அரசு விதைப் பண்ணையில் 21 ஏக்கரில் விதைப்பண்ணை அமைக்கப்பட்டது. அதன் மூலம் விதை உற்பத்தி செய்யப்பட்டு 42 டன் சான்று விதைகள் பெறப்பட்டுள்ளது. இந்த விதைகள் மடத்துக்குளம் வட்டார விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விதைகள் 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர ஏடிடி ஆர் 45 நெல் ரகங்களும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உயிர் உரங்கள், உயிர் பூஞ்சாணக் கொல்லிகளான டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் மற்றும் பயிர் வளர்ச்சியை ஊக்குவித்து மகசூலை அதிகரிக்கும் வகையிலான நெல் நுண்ணூட்டம் போன்றவையும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே மடத்துக்குளம் வட்டார விவசாயிகள் தற்போது நிலவி வரும் சாதகமான சூழ்நிலையைப்பயன்படுத்தி நெல் சாகுபடி செய்து அதிக மகசூல் ஈட்டலாம். அனைத்து பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளும் வேளாண்துறையினரிடம் உரிய ஆலோசனை பெற்று அதிக மகசூல் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.