டிராக்டர் மீது லாரி மோதல்; 2 தொழிலாளிகள் பலி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
கும்மிடிப்பூண்டி அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில், 2 கூலித்தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு கிராமத்தில் இருந்து சிமெண்ட் கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று நேற்று காலை பஞ்செட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. டிராக்டரை பெரிய பொம்மாஜிகுளம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன் (வயது 54) என்பவர் ஓட்டிச்சென்றார். அப்போது டிராக்டரின் பின்னால் இணைக்கப்பட்ட டிரைலரில் சிமெண்ட் கற்கள் மீது தாணிப்பூண்டியை சேர்ந்த குமார் (30), சதீஷ் (20) ஆகிய 2 கூலித்தொழிலாளிகள் அமர்ந்து சென்றனர்.
கவரைப்பேட்டை அடுத்த பெரவள்ளூர் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் சென்று கொண்டிருந்த போது, பின்னால் அதே திசையில் வந்த லாரி ஒன்று, டிராக்டரின் டிரைலர் மீது மோதியது.
இதில் டிரைலர் மட்டும் நிலைத்தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பின்னால் அமர்ந்திருந்த 2 தொழிலாளர்களும் படுகாயமடைந்து வலியால் அலறினர். இதையடுத்து, படுகாயம் அடைந்த கூலித்தொழிலாளிகளான குமார், சதீஷ் ஆகிய 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் டிராக்டர் டிரைவர் வெங்கடேசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (22).நேற்று முன்தினம் இவர், வேலையின் காரணமாக திருநின்றவூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். வீடு நோக்கி வந்து கொண்டிருந்தபோது வேப்பம்பட்டு சாலையில் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயமடைந்த அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே மோகன்ராஜ் பரிதாபமாக இறந்து போனார். இச்சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.