ஊத்துக்கோட்டையில் 12 பவுன் நகைகளை திருடியதாக 3 பெண்கள் கைது
ஊத்துக்கோட்டையில் நகைகளை திருடியதாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 12 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் ரதி (வயது 39). இவர் கடந்த மாதம் 26-ந்தேதி கும்மிடிப்பூண்டியில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மணிபர்சில் 3½ பவுன் தங்க நகைகளை வைத்துகொண்டு ஊத்துக்கோட்டை சத்தியவேடு சாலையில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
இந்த நிலையில், நீண்ட நேரமாகியும் பஸ் வராததால் ஒரு ஆட்டோவில் ஏறினார். அப்போது பணப்பையை திறந்து பார்த்த போது, அதில் வைத்திருந்த தங்க நகைகள் மாயமானது குறித்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ரதி ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதே நாளன்று ஊத்துக்கோட்டை அருகே உள்ள செங்கரை கிராமத்தை சேர்ந்த ஜோதி (50) என்பவர் அம்பத்தூர் அருகே சூரப்பட்டுவில் உள்ள உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள பெரியபாளையம் பஸ்நிலையத்தில் 9 பவுன் தங்க நகைகளை மணி பர்சில் வைத்துகொண்டு நின்றிருந்தார்.
பஸ் வந்தவுடன் ஏறி அமர்ந்த பிறகு பையில் இருந்த மணி பர்சில் 9 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஜோதி பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த இரண்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணை மேற்கொண்டதில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள நல்லாட்டூர் பகுதியை சேர்ந்த நதியா (34), ராணி (42), உமா (35) ஆகியோர் ஊத்துக்கோட்டை சேர்ந்த ரதி மற்றும் ஜோதி ஆகியோரிடமிருந்து நகைகள் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 3 பெண்களை நேற்று கைது செய்த போலீசார், ஊத்துக்கோட்டையில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 12 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.