முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் - எடியூரப்பா திட்டவட்டம்

ராஜினாமா செய்யக்கோரி பா.ஜனதா மேலிடம் எனக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அதனால் பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை” என்று முதல்-மந்திரி எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Update: 2021-07-17 21:29 GMT
பெங்களூரு:

தலைமையை மாற்ற முடிவு

  கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக எடியூரப்பா உள்ளார். எடியூரப்பாவுக்கு 79 வயதாகிறது. இந்தநிலையில் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள மூத்த எம்.எல்.ஏ.க்கள், அவரது வயதை காரணம் காட்டி முதல்-மந்திரியை மாற்ற வேண்டும் என்று பா.ஜனதா மேலிடத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் வருகிற 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலை எடியூரப்பாவுக்கு பதில் மாற்று தலைவரின், தலைமையில் எதிர்கொள்ள பா.ஜனதா மேலிடமும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  இதன் காரணமாக முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் பரவியது. இந்த நிலையில், முதல்-மந்திரி எடியூரப்பாவை டெல்லிக்கு வரும்படி பா.ஜனதா மேலிடம் அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து அவர், தனது மகன் விஜயேந்திராவுடன் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் இரவு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசினார்.

மோடி உத்தரவு

  அதுபோல், நேற்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை தனித்தனியாக சந்தித்து முதல்-மந்திரி எடியூரப்பா பேசனார். இந்த நிலையில், நேற்று முன்தினம் எடியூரப்பா பிரதமர் நரேந்திர மோடியை, சந்தித்து பேசிய போது, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசும்படியும் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும்படி எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
  மேலும் ஏற்கனவே பதவியை ராஜினாமா செய்வதற்காக தான் எடியூரப்பா டெல்லி சென்று இருப்பதாகவும், இதற்காக பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசி வருவதாகவும் தகவல்கள் பரவியது. இதுகுறித்து டெல்லியில் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது;-

  “முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும்படி பா.ஜனதா மேலிடம் என்னை அறிவுறுத்தவில்லை. பிரதமர், பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசிய போது, அதுபோன்ற பேச்சே எழவில்லை. அதனால் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. எனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். இன்னும் 2 ஆண்டுகள் நானே முதல்-மந்திரியாக இருப்பேன். நான் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.

  இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் வதந்தி பரப்பப்படுகிறது. அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பிரதமரிடம் நேற்றே (நேற்று முன்தினம்) பேசியுள்ளேன். எனவே நான் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வெளியாகும் வதந்திகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. ஆகஸ்டு மாதம் மீண்டும் டெல்லிக்கு வர உள்ளேன். அப்போது மாநில வளர்ச்சி குறித்து மத்திய மந்திரிகளை சந்தித்து பேசுவேன்.”
  இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு மாதம் அவகாசம்?

  கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா அரசு அமைந்தபோது 2 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் இருக்கும்படி எடியூரப்பாவுக்கு பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டு இருந்ததாக தெரிகிறது. அதாவது வருகிற 26-ந் தேதியுடன் முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற இருக்கிறது. அதற்கு முன்பாக பா.ஜனதா மேலிடம் எடியூரப்பாவை டெல்லிக்கு அழைத்து பதவியை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும்படியும், கட்சியில் முக்கிய பதவி கொடுப்பதாகவும் எடியூரப்பாவிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக தெரிகிறது. ஆனால் நேற்று காலையில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசியபோது பதவி விலக ஒரு மாதம் காலஅவகாசம் கொடுக்கும்படி எடியூரப்பா கேட்டு கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பரபரப்பு

  இதனால் தான் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசிவிட்டு வெளியே வந்த முதல்-மந்திரி எடியூரப்பா, ஆகஸ்டு மாதம் மீண்டும் டெல்லிக்கு வர இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். முதல்-மந்திரி பதவியில் இன்னும் 2 ஆண்டுகள் நானே நீடிப்பேன் என்று எடியூரப்பா தொடர்ந்து கூறி வந்தாலும், 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, அவரது தலைமையை மாற்ற பா.ஜனதா மேலிடம் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்