பா.ஜனதா பிரமுகர்கள் காங்கிரசில் சேர தயார் - டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி
பா.ஜனதா பிரமுகர்கள், காங்கிரசில் சேர தயாராக இருப்பதாக மாநில தலைவா் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கலபுரகி:
கலபுரகியில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பா.ஜனதாவின் சொத்து அல்ல
லிங்காயத் சமூகத்தை சேர்ந்த எம்.பி.பட்டீல் காங்கிரஸ் கட்சியின் பிரமுக தலைவர்களில் ஒருவர் ஆவார். எஸ்.ஆர்.பட்டீல் கர்நாடக மேல்-சபையின் எதிர்க்கட்சி தலைவராக இருந்து வருகிறார். அவர்கள், லிங்காயத் சமூகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை காங்கிரசுக்கு அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். லிங்காயத் சமூகத்தினர் பா.ஜனதாவின் சொத்து அல்ல.
முதல்-மந்திரி எடியூரப்பா லிங்காயத் சமூகத்தின் முக்கிய தலைவராக இருந்தாலும், அவரது ஆதரவாளர்கள் பலரும் காங்கிரஸ் பக்கம் சாய்ந்துள்ளனர். லிங்காயத் சமூகமாக இருக்கட்டும், எடியூரப்பாவின் ஆதரவாளர்களாக இருக்கட்டும், யாரையெல்லாம் காங்கிரசில் சேர்க்க வேண்டும் என்பது குறித்து அல்லம் வீரபத்ரப்பா தலைமையிலான குழுவினர் முடிவு செய்வார்கள்.
காங்கிரசில் சேர தயார்
பா.ஜனதா கட்சியை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள், காங்கிரசில் சேருவதற்கு தயாராகி வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில், அவர்களது பெயர்களை என்னால் பகிரங்கப்படுத்த முடியாது. லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பலர் காங்கிரஸ் கட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்து வருகின்றனர். ஏராளமானவர்கள் எம்.எல்.ஏ.க்களாக இருந்து வருகிறார்கள். அந்த சமூகத்தை சேர்ந்தவர்களை பா.ஜனதாவினர் மட்டும் உரிமை கொண்டாட முடியாது.
கொரோனா காரணமாக உயிர் இழந்த ஏழை மக்களுக்கு இதுவரை மாநில அரசு எந்த ஒரு நிவாரணமும் வழங்கவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, காங்கிரஸ் தலைவர்கள், ெதாண்டர்கள் வீடு, வீடாக சென்று உதவி செய்து வருகின்றனர்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.