கவர்னர் கெலாட்டுடன், சுமலதா திடீர் சந்திப்பு
கே.ஆர்.எஸ். அணை விவகாரம் குறித்து கவர்னர் கெலாட்டை நேற்று சுமலதா எம்.பி. திடீரென்று சந்தித்து பேசினார். சட்டவிரோத கல்குவாரிக்கு தடை விதிக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு:
கவர்னருடன் சந்திப்பு
மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சட்டவிரோத கல்குவாரிக்கு தடை விதிக்க கோரி சுமலதா அம்பரீஷ் எம்.பி. கூறி வருகிறார். இதுதொடர்பாக கே.ஆர்.எஸ். அணையை அவர் நேரில் சென்று பார்வையிட்டு இருந்தார். ஏற்கனவே அவர், முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து கே.ஆர்.எஸ். அணையை சுற்றி நடைபெறும் சட்டவிரோத கல்குவாரிகளுக்கு தடை விதிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகைக்கு நேற்று காலையில் சுமலதா சென்றார். அங்கு புதிய கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை, சுமலதா சந்தித்து பேசினார். அப்போது கே.ஆர்.எஸ். அணையை பாதுகாக்க தான் போராடி வருவதாகவும், இதற்காக அணையை சுற்றி நடைபெறும் சட்டவிரோத கல்குவாரிகளுக்கு தடை விதிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படியும் கவர்னரிடம் அவர் கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக தனது கோரிக்கை அடங்கிய மனுவையும், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் சுமலதா கொடுத்திருந்தார்.
சட்டவிரோத கல்குவாரிகளுக்கு...
பின்னர் சுமலதா எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், கே.ஆர்.எஸ். அணையை பாதுகாக்க வேண்டும் என்பது தான் எனது முதல் நோக்கம். அதற்காக கவர்னரை சந்தித்து சட்டவிரோத கல்குவாரிகளுக்கு தடை விதிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டேன். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் உறுதி அளித்துள்ளார். கர்நாடகத்தின் புதிய கவர்னராக தாவர்சந்த் கெலாட் பதவி ஏற்றுள்ளதால், என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டேன், என்றார்.
மேலும் நடிகர் தர்ஷன் பெயரை பயன்படுத்தி ரூ.25 கோடி கடன் வாங்க முயன்ற சம்பவம் குறித்து பதிலளிக்க சுமலதா மறுத்து விட்டார். மைசூரு ஓட்டலில் உள்ள ஊழியரை தர்ஷன் தாக்கிய விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து வருவதாகவும், போலீஸ் விசாரணையில் தான் அதுபற்றிய உண்மை வெளியே வரும் என்றும், இந்த விவகாரத்தில் தர்ஷன் மீது குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல என்றும் சுமலதா தெரிவித்தார்.