பா.ஜனதாவில் தலைவர்களுக்கு பற்றாக்குறை இல்லை - எடியூரப்பா பரபரப்பு பேட்டி
இன்னும் 2 ஆண்டுகள் நானே முதல்-மந்திரியாக இருப்பேன் என்றும், பா.ஜனதாவில் தலைவர்களுக்கு பற்றாக்குறை இல்லை என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.;
பெங்களூரு:
முதல்-மந்திரி எடியூரப்பா, டெல்லி சென்றுவிட்டு நேற்று பெங்களூருவுக்கு திரும்பினார். பெங்களூருவில் உள்ள தன்னுடைய இல்லத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நானே முதல்-மந்திரி
டெல்லியில் பா.ஜனதா மேலிட தலைவர்களுடனான சந்திப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது. பிரதமர், மத்திய மந்திரிகள், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசிய போது, என் மீது நம்பிக்கை இருப்பதாகவும், வருகிற 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எனது தலைமையில் சந்திக்க இருப்பதாகவும், இதற்காக கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுமாறும் கூறியுள்ளனர். இந்த சந்திப்பின் போது மாநிலத்தில் தலைமை மாற்றம் குறித்து எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை.
இன்னும் 2 ஆண்டுகள் நானே முதல்-மந்திரியாக இருப்பேன். 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை வெற்றி பெற வைத்து, மீண்டும் ஆட்சியில் அமர வைப்பதே எனது ஒரே நோக்கம். அதற்காக கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுவேன். வருகிற 26-ந் தேதியுடன் நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற இருக்கிறது. அன்றைய தினம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
கட்சி எடுக்கும் முடிவுக்கு...
நான் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வரும் தகவல் உண்மை இல்லை. தலைமை மாற்றும் விவகாரத்தில் பா.ஜனதா மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது. மேலிடம் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டப்பட வேண்டும்.
பா.ஜனதாவில் தலைவர்களுக்கு பற்றாக்குறை இல்லை. மாநிலத்தில் பல தலைவர்கள் உள்ளனர். ஆனால் தற்சமயம் தலைமை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. எனக்கு எதிராக பேசி வரும் மந்திரி யோகேஷ்வர், யத்னால் எம்.எல்.ஏ. குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்களிடம் எதுவும் பேசவில்லை.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
அடுத்த மாதம் மாற்றம்?
டெல்லியில் பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் நடந்த சந்திப்பின் போது தலைமை மாற்றம் குறித்து பேசவில்லை என்று எடியூரப்பா கூறினாலும், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும்படி பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய பல்வேறு நிபந்தனைகளை பா.ஜனதா மேலிடத்திற்கு எடியூரப்பா விதித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது தனது மகன்களான ராகவேந்திரா, விஜயேந்திராவின் அரசியல் எதிர்காலம், மத்திய மந்திரி பதவி குறித்து எடியூரப்பா பேசி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக ஆகஸ்டு முதல் வாரம் எடியூரப்பாவின் தலைமை மாற்றப்படலாம் என்ற தகவல்கள் பரவி வருகிறது.