நெல்லை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை
நெல்லை ரெயில் நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
நெல்லை:
கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கேரளா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ரெயில்களில் வரும் பயணிகளை அந்தந்த ரெயில் நிலையத்தில் வைத்து கொரோனா பரிசோதனை செய்த பின்பு வெளியில் அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இதற்காக ஒரு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவ குழுவினர் திருவனந்தபுரம், குருவாயூர், பெங்களூரு, மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ரெயில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை முகாம் அமைத்து அனைவருக்கும் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் ெரயில் நிலையத்தில் மெயின் வாசலில் செவிலியர்கள் நிறுத்தப்பட்டு பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து அவர்களின் முகவரியினை பதிவு செய்து வருகின்றனர். இதற்காக பயணிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் பலர் இந்த பரிசோதனைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் நைசாக ரெயில் நிலையத்தின் மதில் சுவர் ஏறி குதித்து சென்றுவிடுகின்றனர். அவர்களை போலீசார் விரட்டிச் சென்று பிடித்து வந்து மீண்டும் பரிசோதனை செய்கிறார்கள். கேரளாவில் மீண்டும் கொரோனா மற்றும் ஜிகா பரவல் அதிகமாகி வருகிறது. இதனால் அங்கிருந்து வரும் பயணிகளுக்கு அதிகளவில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.