அரசு பள்ளிக்கூடங்களில் செயல்பட்டு வரும் மழலையர் வகுப்புகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படுமா?
அரசு பள்ளிக்கூடங்களில் இயங்கும் மழலையர் வகுப்புகளுக்கு புத்தகங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
அரசு பள்ளிக்கூடங்களில் இயங்கும் மழலையர் வகுப்புகளுக்கு புத்தகங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
மழலையர் வகுப்புகள்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் மழலையர் வகுப்புகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டன. இதற்காக மாவட்டங்கள் தோறும் பள்ளிக்கூடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த பள்ளிக்கூடங்களையொட்டிய பகுதிகளில் இயங்கி வந்த அங்கன்வாடி மையங்கள் மழலையர் பள்ளிகளாக மாற்றப்பட்டன.
இந்த பள்ளிக்கூடங்கள் அத்துடன் இணைக்கப்பட்ட அரசு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியைகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், குழந்தைகளுக்கான மதிய உணவு, பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மூலம் அங்கன்வாடி மையங்களின் கணக்கிலேயே வழங்கப்பட்டு வந்தன.
சேர்க்கை அதிகரிப்பு
இந்த நிலையில் தற்போது எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்புவரை ஆன்லைன் வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளிக்கூடங்களிலும் ஆசிரிய -ஆசிரியைகள் தங்கள் மாணவ-மாணவிகளுக்கு வாட்ஸ்அப் வகுப்புகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே ஒரு ஆண்டு வகுப்புகள் எடுக்கப்படாமலேயே கடந்து விட்டதால், இந்த ஆண்டு ஆன்லைன் வகுப்புகளில் மாணவ-மாணவிகள் ஆர்வமாக உள்ளனர். பள்ளிக்கூடம் திறக்கும் நாட்களை ஆர்வமாக எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
இந்த ஆண்டு அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இருக்கிறது. தனியார் பள்ளிக்கூடங்களில் கட்டணம் செலுத்தி, ஆன்லைன் வகுப்பில் கல்வி கற்பதைவிட, அரசு பள்ளிக்கூடங்களில் எந்த கட்டணமும் இன்றி மாணவ-மாணவிகளை சேர்க்க முடியும் என்பதாலும் புத்தகங்கள் உள்பட அனைத்து அரசின் உதவிப்பொருட்களும் இலவசமாக கிடைத்துவிடும் என்பதாலும் நடுத்தர பொருளாதார வர்க்கத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிக்கூடங்களில் சேர்த்து வருகிறார்கள்.
புத்தகங்கள் இல்லை
இவ்வாறு இந்த ஆண்டு அரசு பள்ளிக்கூடங்களில் இயங்கி வரும் மழலையர் பள்ளிக்கூடங்களிலும் குழந்தைகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் பள்ளிக்கல்வித்துறை மூலம் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்குகிறது. எனவே கடந்த ஜூன் மாதம் இந்த ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கியது முதல் மாணவ-மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால் மழலையர் வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மூலம் அங்கன்வாடி மையங்கள் மூலமாக புத்தகங்கள் வினியோகம் செய்ய வேண்டும். ஆனால் இதுவரை புத்தகங்கள் வழங்கப்படவில்லை. ஏற்கனவே மழலையர் வகுப்புகள் செயல்பட்டு வந்த பள்ளிக்கூடங்களில் கடந்த ஆண்டுகளில் வழங்கிய புத்தகங்களை வைத்து ஆசிரியைகள் குழந்தைகளுக்கு பாடங்கள் நடத்தி வருகிறார்கள். ஆனால் புதிதாக மழலையர் வகுப்புகளை தொடங்கிய பள்ளிக்கூடங்களில் புத்தகங்கள் இல்லாமல் பாடங்கள் எடுக்க ஆசிரியர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.
அனைத்து வகுப்புகளுக்கும் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில் மழலையர் வகுப்புகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படாதது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.