ராமநாதபுரம் மண்டல துணை தாசில்தார் ரவி, தலையாரி கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் மணல் திருட்டு தொடர்பாக தீவிர கண்காணிப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏந்தல் பகுதியில் அரசு நீரோடையில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளியவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் வாலாந்தரவை சேர்ந்த நாகராஜ் மகன் மூவீஷ் (வயது 26) என்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து டிராக்டர் மணலுடன் மூவீஷை ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.